Thursday, May 27, 2010

அப்பத்தா

என்
சிறு பிராயம்
முதல்

உன்னை
கண் பார்வை
அற்றவளாகத்தான்
அறிந்திருந்தேன்...

ஒரு டம்ளர்
ஊற வைத்த அரிசி

அதை
அம்மியில் வைத்து
நீ அரைக்கும் லாவகம்
இப்போது கூட
எவரிடத்தும்
காண முடியவில்லை

நாளும் பொழுதும்
நீ இருக்கும் விரதம்...

விழிகள் மூடியிருப்பினும்
வீடென்னவோ
கோயில் மாதிரி
அத்தனை சுத்தம்...

வீட்டின்
முற்றம் முதல்
பின் வாயில் வரை
அத்தனை துல்லியமாய்
அளந்து வைத்திருக்கும்
ஆர்வம்...

நகத்தின்
ஓசை கேட்பினும்
வந்தது யாரென்று அறியும்
உன் இமைகள்

சுத்தம்...
சுத்தம்...
எல்லாவற்றிலும்
சுத்தம்...

என்ன செய்ய
உன்னை
மரணப் படுக்கையில்
வைத்து விட்டு
குளிப்பாட்ட
நீருக்கு அலைகையில்

கிடைத்ததென்னவோ
சேறும் சகதியும்
கலந்த தண்ணீர்
மட்டுமே...

No comments: