வழக்கத்திற்கு மாறாய் அப்போது அந்த வீடு காணப்பட்டது. வீடெங்கும் மாலைகள் இறைந்து கிடந்தன. யாருக்கும் ஒவ்வாத ஒருவித வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது ஊதுவத்தி! அழுகைச்சத்தம் உரக்கக் கேட்டுக்கொண்டிருந்தது.
வீட்டின் நடுநாயகமாய் உள்ள சேரில் தப்புக்கோட்டித் தேவர் அமர்த்தி வைக்கப்பட்டு சேரோடு இணைத்து கயிற்றால் கட்டப்பட்டிருந்தார். அவருக்கு கழுத்தே கொள்ளாத அளவிற்கு மாலைகள் போடப் பட்டிருந்தன. மாலைகள் அதிகமானதால் அவரின் பாதி முகம் மறைந்திருந்தது. வீட்டின் வெளியே பந்தல் போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த நீளமான மரப் பெஞ்சில் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
"எப்ப உயிர் போச்சாம்...''
அருகிலிருந்த ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
"இப்பத்தான் ஒரு ரெண்டுமணிநேரம் இருக்குமாம்...அதுவரைக்கும் அய்யா நல்லாதான் இருந்துருக்காரு... பாவம்.''
".ஹும் என்ன செய்ய...?''
எனக்கு கொஞ்சம் முன்புதான் விஷயமே தெரியும். அரக்கப்பரக்க ஒரு மாலையை வாங்கிக்கொண்டு ஓடினேன். நான் போனபோது இன்னும் நிறைய ஆட்கள் குழுமி யிருந்தார்கள். மனசு நிறைய துக்கத்துடன் அவர் கழுத்தில் என் பங்குக்கு நானும் ஒரு மாலையைப் போட்டேன். அவருடைய கடைசி மகன் ஒரு ஓரமாய் துக்கத்துடன் நின்றிருந்தான். அவன் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னேன். அவன் முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கும் துக்கம் பற்றிக்கொண்டு வந்தது. தெரிந்தவர்கள் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னார்கள். நானும் அவர்களைப் பார்த்து லேசாய் புன்முறுவல் செய்தேன்.
நேரம் ஆக ஆக ஆட்கள் ஒவ் வொருவராய் கூடிக் கொண்டிருந் தார்கள். நான் எவரிடமும் பேசாமல் ஒரு ஓரமாய் நின்று கொண்டி ருந்தேன். என் மனதுக்குள் அவரைப் பற்றிய கடந்தகால நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன.
எங்கள் கிராமம் ஓரளவு செழிப் பாய் இருந்த காலம் அது. மழையும் அவ்வப்போது ஓரளவு பெய்து கொண்டிருந்தது. மேலும் பற்றாக் குறைக்கு சில பெரிய மனிதர்கüன் பம்புசெட்டுக்களும் கிராமத்திற்கு உதவிக்கொண்டிருந்தன. விளைச் சலும் சொல்-க்கொள்ளும்படி யாகவே இருந்தது. ஊரின் நடுநாயக மாய் ஒரு மிகப்பெரிய ஆலமரம் மேலும் அழகு சேர்த்துக்கொண்டி ருந்தது. மரத்தின் கீழ் பிள்ளையார்; சிலையாய் எப்போதும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார். பஞ்சா யத்து மடத்தில் ஊர்ப்பெரிசுகள் அரசியல் என்ற பெயரில் வம்பளந்து கொண்டிருப்பார்கள். இளசுகள் கோ-க்குண்டும், கிட்டிப்புள்ளும், கபடியும் விளையாடிக் கொண்டி ருக்கும்.
அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். காலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் பழக்கம் அப்போது எனக்கு இருந்தது. (இப்போது நகரத்தின் நரக வாழ்க்கை யில் ஏழு மணிக்குக் குறைவாய் எழவே முடியவில்லை என்பது தனிக்கதை.) அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் என் குரல்தான் அருகில் உள்ள கிராமத்து மக்களை உசுப்பிவிடும். "உருண்டேய்....'' சைக்கிள் மணியின் ஒ-ச்சத்தத் தோடு "உருண்டேய்' சத்தமும் வாண்டுகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் எழுந்துகொள்ள வைக்கும். "உருண்டேய்' என்றால் என்னவோ ஏதோ என நினைத்து விடாதீர்கள். அது ஒரு அற்புதமான சுவையுடன் இருக்கும் மைதாமாவுப் பணியாரம்தான். முழுக்க தேவரின் கைப்பக்குவத்தில்தான் அது செய்யப் பட்டிருக்கும். காலை ஐந்து மணிக் குள்ளாகவே சுடச்சுட பாத்திரத்தில் நிரப்பி வைத்தி ருப்பார். நான் அதை எடுத்துப்போய் "உருண்டேய்... உருண்டேய்' என சைக்கிüல் விற்று விட்டு வந்த காலம் இப் போதும் என் மனத்தை விட்டு அகலுவதாயில்லை.
தப்புக்கோட்டித்தேவரின் (அவரின் பெயர்க்காரணம் இதுவரை எனக்குத் தெரியவேயில்லை. நானும் மற்றவர்களிடம் கேட்டது மில்லை.) கடை ரோட்டு மேல் வீற்றிருக்கும். கடை என்றால் ஏதோ பெரிய அளவுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சிறிய கீற்றுக்கொட்டகை வேயப் பட்ட கூரை. அவ்வளவுதான். அதில்தான் தேவரின் வாழ்க்கை நடந்து கொண் டிருந்தது. எங்கள் கிராமத் திற்கு மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமத்து மக்கள் கூட தேவரின் கடை நோக்கி கருப்பட்டித் தேநீர் அருந்த வருவதுண்டு. அந்த அதிகாலை நேரத்தில் அவர் சுட்டு வைத்திருக்கும் அந்த மைதாமாவு உருண்டையும் கருப்பட்டித் தேநீரும் தேவாமிர்தமாய் இருக்கும். அதுபோக அவர் சுடச்சுட இட்-யும் சுட்டு வைத்தி ருப்பார். ஆனாலும் அந்த மைதா உருண்டைக்கும் கருப்பட்டித் தேநீருக்கும்தான் அந்த ஊரில் மிகப்பெரிய மவுசே.
நான் ஒரு பாத்திரம் நிறைய உருண்டை எடுத்துக்கொண்டுதான் அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்வேன். காலை ஆறு மணிக்குச் சென்றால் ஏழரை மணிக்குள்ளாக நான் வீடு திரும்ப வேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே எல்லாப் பலகாரமும் விற்றுப்போயிருக்கும். அதன்பிறகு நான் வீடு வந்து குளித்துவிட்டு ஸ்கூலுக்குச் செல்ல வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது.
காலங்கள் உருண்டோட உருண் டோட மனித வாழ்க்கையும் வெவ்வேறு பாதைகளில் உருண்டோ டவே செய்கிறது. எங்கள் கிராமமும் வறட்சியால் தள்ளாட ஆரம்பித்தது. ஊரில் மழை பொய்த்துப்போனது. மழை பொய்த்ததால் விவசாயம் குறைந்துபோனது. மக்கள் வெவ் வேறு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய நிலை வந்தது. தேவரின் கடை வருமானம் குறைந்து... குறைந்து... கடைசியில் அவரும் ஊரைவிட்டுப் பட்டணத்தில் இருக்கும் தன் மகனிடம் போய் அடைக் கலமானார்.
நான் தேவரய்யாவைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் எண்ண மும் செயலும் மாறிப்போய் தேவரய் யாவின் நினைப்பு என்னை விட்டு முழுவதுமாய் அகன்று போனது.
நான் நகரத்திற்கு வந்து இரண்டு மூன்று வருடங்களாகி யிருக்கும். காலம் என்னையும் கிராமத்தை விட்டு நகரத்தில் வாழும் மனிதனாக்கியிருந்தது. நகரத்தின் பேருந்துகளில் நானும் ஓடிக் கொண்டிருந்தேன். கூட்ட நெரிசலில் நானும் சிக்கி நசுங்கிக் கொண்டி ருந்தேன். காலை அலுவலகம் வந்தால் இரவு வீடு நோக்கிச் செல்வதே என் வாடிக்கையாகிப் போன காலமாய் என் நகர வாழ்க்கை மாறிப் போயிருந்தது. ஒரு விடுமுறை தினத்தில் தற்செயலாய் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் தலையில் முண்டாசு கட்டி சைக்கிள் ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்தது என்னை சடக் கென திரும்பிப் பார்க்க வைத்தது.
அதே தப்புக்கோட்டித் தேவர்தான்.
என்னைப்பார்த்ததும் அவரும் ரிக்ஷாவில் இருந்து இறங்கிவிட்டார்.
"யப்பூ.... ஒன்னப்பாத்து எம்புட்டு நாளாச்சு...''
வாஞ்சையுடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். நானும் அவரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன்.
"எப்பிடி இருக்கீங்க ஐயா...''
"ம்... இருக்கேண்டா ராசா... ஏதோ இன்னைக்கோ நாளைக்கோன்னு...'' -சலிப்புடனும் அதே நேரத்தில் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டும் சொன்னார்.
"வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ஐயா...'' -நான் கேட்டேன்.
"நல்லா இருக்காக ராசா... நீ எப்ப பட்டணம் வந்த பேராண்டி?'' என்றார்.
"இப்பத்தான்... கொஞ்ச நாளாச்சு...''
"நம்ம வீட்டுக்கு ஒருநா வந்துட்டுப்போ பேராண்டி!'' -அன்போடு அழைத்தார்.
"கட்டாயம் வர்றேங்கய்யா...''
அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
இன்னும் மனதுக்குள் அவரைப் பற்றிய எண்ணம் என்னை விட்டு அகன்றபாடில்லை. "அடடா எப்படி இருந்த மனுஷர் இப்படி வாடி வதங்கிட்டாரே...' அவரைப்பற்றிய நினைப்புடனே நான் தங்கியிருந்த அறை நோக்கி நடந்துகொண்டி ருந்தேன்.
"ம்... சட்டுப் புட்டுன்னு அடக்கம் பண்றதுக்கு ரெடி பண் ணுங்கப்பா...'' -குரல் கேட்டு மறுபடியும் தற்போதைய நிகழ்வுக்கு வந்தேன். சொந்தபந்தங்கள் அனைவரும் கிட்டத்தட்ட வந்தி ருந்தார்கள். தேவரய்யாவின் உடலைக் குüப்பாட்டி முடித்து பூவால் அலங்கரிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த பல்லக்கில் ஏற்றினார்கள். இறுதி ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது.
மயானத்தில் தகனம் செய்யப்பட தேவரின் உடல் கிடத்தப் பட்டிருந்தது.
"எல்லாரும் வந்து அய்யாவுக்கு வாக்கெரிசி போடுங்க...'' யாரோ குரல் கொடுத்தார்கள். தேவரின் மகன்கள் இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தார்கள். சிதைக்கு நெருப்பு மூட்டப்பட்டது.
"எங்க பொறந்த மகராசா, அவருக்கு எங்க வந்து எடம் கெடெச்சிருக்கு பாத்தீகளா...?'' எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த அந்தக்குரல் துக்கத்துடன் நின்றிருந்த என் மௌனத்தைக் கலைத்தது.
"எம்புட்டோ பெரெயாசப் பட்டும் அவருக்கு பொறந்த மண்ணு கெடெக்கெலியே...'' ஒரு பெரியவர் துக்கத்துடன் கூறிக்கொண்டிருந்தார்.
நான் மௌனமாய் மயானத்தை விட்டு இறுகிப்போன முகத்துடன் வெளியேறினேன்.
எனக்குள் "எம்புட்டோ பெரெ யாசப்பட்டும் அவருக்கு பொறந்த மண்ணு கெடெக்கெலியே' என்ற அந்தப்பெரியவரின் குரல் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment