Thursday, July 1, 2010

விஷ­ம் போல ஏறுது விலைவாசி! எப்படி வாழ்வது நீ யோசி!

வி­ஷம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

அரிசி விலை ஆகாயத்தில்...
பருப்பு விலை பட்டத்தைப் போல உயரத்தில்...
காய்கறி விலையும்
சூறாவளிக் காற்றாய் நம்மைச் சுற்றி சுற்றி அடிக்க...

வி­ஷம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

கேஸ் விலையேற்றத்தால்
பெண்கள் கண்ணீர்
பெட்ரோல் விலையேற்றத்தால்
எங்கள் கண்ணீர்

விஷ­ம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

மக்களைக் காப்பாற்ற
"மன்னாதி மன்னன்' இல்லை...
ஏழைகளைக் காப்பாற்ற
எந்த அரசியல்வாதியும் இல்லை...

வி­ஷம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

விரைவில் வரப்போகுது தேர்தல்
வெற்றிக்காக போராடுபவர்கள்
எஜமான்கள்...

ஓட்டுக்குப் பணம் என்பது
ஒலகமே அறிஞ்சாச்சு...

எவ்வளவு கேட்கலாம்
யோசிச்சுப் பாத்தா
ஒரு ஓட்டுக்கு
ஒரு லட்சம் கேக்கலாம்...

அஞ்சு வரு­த்துக்கு கணக்குப் போட்டுப் பாத்தா
ஒரு நாளைக்கு அம்பத்தஞ்சு ருவாய்க்கும்
குறையாத்தான் வருது...

கணக்குப் போட்டுப் பாருங்க...
தப்பா இருந்தா சொல்லுங்க...

விஷ­ம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

Wednesday, June 30, 2010

''மங்கை சூதகமானால்...

பெட்ரோல், டீசல் உயர்வால் ஏழைகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என்றும் இந்திய மக்கள் புத்திசாலிகள் இந்த விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள் எனவும் இந்தியப் பொருளாதார மேதையும் பாரதப் பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங் ஜி.20 மாநாட்டில் விமானத்தில் பறந்து விட்டு டெல்லி வீதிகளில் உயர்ரக காரில் பறப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலை பகிர்ந்த செய்தி இன்றைய தினத்தந்தியில் வெளியானது.

இதேபோல கோவையில் நமது முதல்வரும் ஒரு தகவலைச் சொல்லியிருந்தார். அதாவது இன்னும் அதிகமாக உயர்த்தப்படும் என்று நினைத்திருந்தேன். பரவாயில்லை. தாங்கிக் கொள்வார்கள் நமது மக்கள் என்ற ரீதியில்.

எனக்கு இந்நேரத்தில் தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது...

''மங்கை சூதகமானால்
கங்கையிலே மூழ்குவது;
கங்கையே சூதகமானால்
எங்கே போய் மூழ்குவது''

Tuesday, June 29, 2010

கந்தகத்தினால் மட்டுமல்ல...

தீக்குச்சி எரிகிறது
கூடவே என் மனதும்...

பெட்டிக்குள் அடைபடும்
தீக்குச்சிகளைப் போலவே
நாங்களும்
அடைபடுகிறோம்...

குச்சிகளாய் சிதறுவதில்
குதுகலம் இருப்பினும்
எங்களை அடைத்து வைப்பதில்தான்
ஆனந்தம் காண்பார்கள் முதலாளிகள்...

மாலை நேரமே
மனதுக்குச் சந்தோஷம்...

இல்லம் திரும்பும் பேருந்தே
எங்களின் 
புஷ்பக விமானம்...

வீட்டில்
எரியும் நெருப்பில்
எங்கள் முகமும்
எங்களுக்கே தெரியும்...

ஒரு நிமிடம்

தீக்குச்சி எரிவது
கந்தகத்தினால் மட்டுமல்ல...
எங்களின் கண்ணீராலும்...

Sunday, June 27, 2010

ஆழமென்னும் அளவுகோல்

நீ நிரம்பித் தளும்பியபோதெல்லாம்
எங்களுக்குள் உற்சாக மடை வெள்ளம்...

கால் சட்டை மட்டுமே அணிந்த
அந்நாட்களில்
கவலைகள் ஏது?

உன் ஆழமென்னும்
அளவுகோல் அப்போதெல்லாம்
கண்களுக்குத் தெரிவதில்லை.

எத்தனை அடி உயரமோ
எங்களுக்குக் கவலையே இருந்ததில்லை...

எத்தனை ஜீவராசிகள்
உனக்குள்ளே வாழ்ந்தவர்கள்...

ஒரு புறம்
வாலைக் குமரிகளின்
வர்ண ஜாலங்கள்
அதைக் குறி வைக்கும்
வாலிப உள்ளங்கள்...

மறுபுறம்
யாருக்கும் அடங்காத
கால்சட்டைகளின்
குதியாட்டம்

உன்னைப் பார்த்துப் பார்த்து
ஆசைப்பட்ட அந்த நாட்கள்...

இப்போது நகரத்தின்
நாகரீக வாழ்க்கையில்
தொலைந்து போய் விட்டாலும்

குளியலறைக்குள்
அவ்வப்போது உன் ஞாபகம்...

இப்போது வறண்டு போய்
கை நனைக்கும் அளவுக்கு மட்டுமே
உன்னை நீ சுருக்கிக் கொண்டதை
நினைக்கையில்

கடந்து போன வயதும்
கண்மாய் நிரம்பி வழிந்த அந்நாட்களும்
திரும்பவும் வாராதோ?

Friday, June 25, 2010

தமிழ்

சங்கத் தமிழ்
இலக்கணத் தமிழ்
எதுகைத் தமிழ்
மோனைத் தமிழ்

கவிச்சக்கரவர்த்தியின் தமிழ்
காளமேகப் புலவனின் தமிழ்
பாட்டுப் புலவனின் தமிழ்
பாவேந்தனின் தமிழ்

கவியரசுவின் தமிழ்
கலைஞரின் தமிழ்
அமுதத் தமிழ்
அழகுத் தமிழ்

இணையத் தமிழ்
இனிய தமிழ்
இவை அத்தனைக்கும் கட்டியம் கூறும்
மழலைத் தமிழ்...

Tuesday, June 8, 2010

பக்சே...

மாவீரன் பிரபாகரனை பெற்ற தாய் பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு வர அனுமதி தரவில்லை.   ஆனால் ராஜபக்சேவுக்கு மட்டும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது கொடுமை.
ஏன் இந்த இனதுரோகம்?’’
-வைகோ

ரத்தக்கறையை கழுவப்பார்க்கிறார் ராஜபக்சே
-சீமான்

ராஜபக்சே கைவசம் என்ன திட்டம் வைத்துள்ளார்
- டி.ராஜா

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு

உணர்வுகள் கொந்தளிக்கட்டும்...
உனக்குள்ளும்...

Monday, June 7, 2010

ஒரு கண்டனம்

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. இதோ பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலை உயரப் போகுது. அனேகமாய் இப்போதே பெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்திருக்கும். மம்தா பானர்ஜி அத்தனை பிரச்சினைக்கிடையேயும் ஓவியம் வரைகிறார். (இது கூட உங்களுக்கு பிரச்சினையா?) கலைஞர் வழக்கம் போல் கடிதம் வரைகிறார் மன்மோகன்சிங்குக்கு. தினத்தந்தியில் தலைப்புச் செய்தி. எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக என்கிறார்கள். ஆனால் ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். இத்தனை விஷயங்கள் இருக்கும் போது இதற்கெல்லாம் ஒரு பதிவு அவசியமா எனத் தோன்றும் படிக்கும் நண்பர்களுக்கு... (படிக்கிறார்களா என்பது வேறு விஷயம்.)

ஆனால் சொல்ல நினைக்கும் விஷயங்களை சொல்லி விடுவோம் என்பதற்காகவே இந்தப் பதிவு.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேறென்ன செய்வது அதானே வழி.
தமிழகத்தின் முதன்மைத் தொலைக்காட்சியாம் சன் டி.வி. டாப் டென் என்ற பாடல் வரிசைக் காட்சியை ஒளிபரப்பினார்கள்.
அதற்கு ஒரு முன்னோட்டம். இந்நிகழ்ச்சி யாருடைய மனதையும் புண்படுத்துபவை அல்ல... என்று. (புண்படுத்தவில்லை என்றால் இதை நான் எழுதவே மாட்டேன்.)
அந்த நிகழ்ச்சியில் வழக்கமாக ஒரு பிரபல திரைப்படத்தை எடுத்து நக்கல் நையாண்டி செய்யப்படுவதுண்டு.
நேற்றைய நிகழ்ச்சியில் அப்படி செய்யப்பட்ட திரைப்படம்
தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்
திரைப்படத்தை விமர்சனம் செய்யட்டும் பரவாயில்லை. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் வாந்தி வருகிற அருவருப்பை வரவழைக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைப் பார்த்த அத்தனை தலைவரின் ரசிகர்களுக்கும் நிச்சயம் கோபம் வந்திருக்கும். அந்த அளவுக்கு மட்டமாய் இருந்தது .
இது என்ன ரசனை.
அதற்கு முதல்நாள் தான் அந்தத் திரைப்படத்தை எனது அலுவலகத்தில் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஒரு விஷயத்தை சிலாகித்தார்.
அதாவது ஒரு தெற்காசிய நாடுகளில் மட்டுமே படம் பிடிக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் (3 நாடுகளில் மட்டும்) ஏற்படுத்திய தாக்கத்தை வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட எந்தத் திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சி அப்போது வெளிநாட்டுப் படங்களில் கூட இடம்பெற்றதில்லையாம். இப்போது இடம் பெறுகிறதா எனத் தெரியவில்லை. அந்த எக்ஸ்போ கண்காட்சியைப் படம் பிடிக்க அந்த அளவுக்கு சிரமப்பட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அந்தப் படத்தின் திரைக்கதை ஒரு சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு திரைப்படத்தை இத்தனை அருவருப்பாய் நையாண்டி செய்வது காலக்கொடுமை.
தயவு செய்து இதை உண்ர்ந்து கொள்ளுங்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு.