Sunday, June 27, 2010

ஆழமென்னும் அளவுகோல்

நீ நிரம்பித் தளும்பியபோதெல்லாம்
எங்களுக்குள் உற்சாக மடை வெள்ளம்...

கால் சட்டை மட்டுமே அணிந்த
அந்நாட்களில்
கவலைகள் ஏது?

உன் ஆழமென்னும்
அளவுகோல் அப்போதெல்லாம்
கண்களுக்குத் தெரிவதில்லை.

எத்தனை அடி உயரமோ
எங்களுக்குக் கவலையே இருந்ததில்லை...

எத்தனை ஜீவராசிகள்
உனக்குள்ளே வாழ்ந்தவர்கள்...

ஒரு புறம்
வாலைக் குமரிகளின்
வர்ண ஜாலங்கள்
அதைக் குறி வைக்கும்
வாலிப உள்ளங்கள்...

மறுபுறம்
யாருக்கும் அடங்காத
கால்சட்டைகளின்
குதியாட்டம்

உன்னைப் பார்த்துப் பார்த்து
ஆசைப்பட்ட அந்த நாட்கள்...

இப்போது நகரத்தின்
நாகரீக வாழ்க்கையில்
தொலைந்து போய் விட்டாலும்

குளியலறைக்குள்
அவ்வப்போது உன் ஞாபகம்...

இப்போது வறண்டு போய்
கை நனைக்கும் அளவுக்கு மட்டுமே
உன்னை நீ சுருக்கிக் கொண்டதை
நினைக்கையில்

கடந்து போன வயதும்
கண்மாய் நிரம்பி வழிந்த அந்நாட்களும்
திரும்பவும் வாராதோ?

1 comment:

குடந்தை அன்புமணி said...

//கடந்து போன வயதும்
கண்மாய் நிரம்பி வழிந்த அந்நாட்களும்
திரும்பவும் வாராதோ?//

உண்மையான வரிகள். பசுமை நிறைந்த அந்த நாட்களை நினைவுபடுத்துகிறது இந்த வரிகள்... ம்...