நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. இதோ பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலை உயரப் போகுது. அனேகமாய் இப்போதே பெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்திருக்கும். மம்தா பானர்ஜி அத்தனை பிரச்சினைக்கிடையேயும் ஓவியம் வரைகிறார். (இது கூட உங்களுக்கு பிரச்சினையா?) கலைஞர் வழக்கம் போல் கடிதம் வரைகிறார் மன்மோகன்சிங்குக்கு. தினத்தந்தியில் தலைப்புச் செய்தி. எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக என்கிறார்கள். ஆனால் ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். இத்தனை விஷயங்கள் இருக்கும் போது இதற்கெல்லாம் ஒரு பதிவு அவசியமா எனத் தோன்றும் படிக்கும் நண்பர்களுக்கு... (படிக்கிறார்களா என்பது வேறு விஷயம்.)
ஆனால் சொல்ல நினைக்கும் விஷயங்களை சொல்லி விடுவோம் என்பதற்காகவே இந்தப் பதிவு.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேறென்ன செய்வது அதானே வழி.
தமிழகத்தின் முதன்மைத் தொலைக்காட்சியாம் சன் டி.வி. டாப் டென் என்ற பாடல் வரிசைக் காட்சியை ஒளிபரப்பினார்கள்.
அதற்கு ஒரு முன்னோட்டம். இந்நிகழ்ச்சி யாருடைய மனதையும் புண்படுத்துபவை அல்ல... என்று. (புண்படுத்தவில்லை என்றால் இதை நான் எழுதவே மாட்டேன்.)
அந்த நிகழ்ச்சியில் வழக்கமாக ஒரு பிரபல திரைப்படத்தை எடுத்து நக்கல் நையாண்டி செய்யப்படுவதுண்டு.
நேற்றைய நிகழ்ச்சியில் அப்படி செய்யப்பட்ட திரைப்படம்
தலைவரின்
உலகம் சுற்றும் வாலிபன்
திரைப்படத்தை விமர்சனம் செய்யட்டும் பரவாயில்லை. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் வாந்தி வருகிற அருவருப்பை வரவழைக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைப் பார்த்த அத்தனை தலைவரின் ரசிகர்களுக்கும் நிச்சயம் கோபம் வந்திருக்கும். அந்த அளவுக்கு மட்டமாய் இருந்தது .
இது என்ன ரசனை.
அதற்கு முதல்நாள் தான் அந்தத் திரைப்படத்தை எனது அலுவலகத்தில் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஒரு விஷயத்தை சிலாகித்தார்.
அதாவது ஒரு தெற்காசிய நாடுகளில் மட்டுமே படம் பிடிக்கப்பட்ட
உலகம் சுற்றும் வாலிபன் (3 நாடுகளில் மட்டும்) ஏற்படுத்திய தாக்கத்தை வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட எந்தத் திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக ஜப்பானில் நடைபெற்ற
எக்ஸ்போ கண்காட்சி அப்போது வெளிநாட்டுப் படங்களில் கூட இடம்பெற்றதில்லையாம். இப்போது இடம் பெறுகிறதா எனத் தெரியவில்லை. அந்த எக்ஸ்போ கண்காட்சியைப் படம் பிடிக்க அந்த அளவுக்கு சிரமப்பட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அந்தப் படத்தின் திரைக்கதை ஒரு சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு திரைப்படத்தை இத்தனை அருவருப்பாய் நையாண்டி செய்வது காலக்கொடுமை.
தயவு செய்து இதை உண்ர்ந்து கொள்ளுங்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு.